கோவை: மத்தம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த இளைஞர்களை சோதனை செய்த போது, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 200 கிராம் கஞ்சா, 208 போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கண்ட போது, அவர்கள் 3 பேரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன், பிரவீன்குமார், நவீன்குமார் என்பது தெரியவந்தது.
அதன்பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பவர்கள் யாரேனும் தங்களது பகுதியில் இருந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அவ்வாறு தெரியப்படுத்துபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும். போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்டு நல்வழிப்படுத்த காவல்துறை தொடர்ந்து பணியாற்றும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஐவர் கால்பந்து போட்டி