கோவை: நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் 'இரைப்பை மற்றும் குடல் 2023' எனும் மருத்துவ மாநாடு நடைபெற்றது. இதில், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி மருத்துவர்கள் கலந்து கொண்டு இரைப்பை சார்ந்த நோய் பாதிப்புகள் மற்றும் அதற்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு இதன் தொடக்க விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விருதுகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், கோவிட் காலத்தில் தன்னலமின்றி பாதுகாப்பு இல்லாத சூழலிலும் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி கூறினார். குறிப்பாக, கோவிட் இரண்டாவது அலையின்போது எனது குடும்பத்தினரும் கோவிட் பாதிப்புக்குள்ளான போது பெரும் சிரமங்களை நான் உணர்ந்தேன். இந்த நேரத்தில், தன்னலமின்றி பணியாற்றிய மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் 12 அப்பாவி மீனவர்கள்: இதனிடையே, மாலத்தீவில் படகுடன் சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழ்நாடு மீனவர்களையும் பத்திரமாக படகுடன் மீட்கக் கோரி, தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்கள் சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடன் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், 'தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த அக்.20 ஆம் தேதி மாலத்தீவு அரசால் சிறைபிடிக்கப்பட்டது. அதோடு, தற்போது மீனவர்களுக்கு ரூ.2 கோடி 27 லட்சம் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகவும்; இதனால், மீனவர்கள் மற்றும் ஊர்மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
மாலத்தீவில் இருந்து 12 மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: எனவே, இந்த விவகாரத்தில் மத்திய இணை அமைச்சர் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் எல்.முருகன், 'மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தூத்துக்குடி மீனவர்களிடம் உறுதி அளித்தார்.
இந்தியாவிலிருந்து 301 பில்லியன் கோவிட் தடுப்பூசி ஏற்றுமதி: தொடர்ந்து பேசிய அவர், 'இந்தியா இளைஞர்களுக்கான புதிய பாரதமாக உருவாகி வருகிறது. ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ், கோவிட் காலகட்டத்தின்போது, இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரிக்க அறிவுறுத்தியதில், நாம் வெற்றியடைந்தோம். 301 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.
உலக நாடுகள் அனைத்தும் இதனால், பயனடைந்ததற்காக நமது நாட்டின் விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் நன்றி கூற வேண்டும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் மிகக் குறைந்த அளவு தடுப்பூசி தயாரித்தபோது, இந்தியா இதனை நூற்றுக்கும் மேலான பிற நாடுகளுக்கும் அனுப்பி சாதனை புரிந்தது.
இதற்கு முன்பு, N95 முகக்கவசம், PPT உடை போன்றவை என்றால் என்ன? என்று தெரியாமல் இருந்தது. கோவிட் பாதிப்பிற்கு பிறகு கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள ஜவுளி தொழிற்சாலைகளில் இவை தயாரிக்கப்பட்டு உலக அளவில் ஏற்றுமதியாகின. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடி அட்டைகள் வழங்கப்பட்டு, 26 ஆயிரம் மருத்துவமனைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன' எனப் பேசினார்.
ரூ.200 கோடி ஒதுக்கீடு: ஐந்து லட்சம் மதிப்பிலான இந்த காப்பீட்டு திட்டத்திற்காக, இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆயுஷ்மான் பாரத் திட்டத்தினை, டிஜிட்டல் மயமாக்கும் பணிகளுக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 9,303 பிரதமரின் ஜன் அவுஷதி மருந்தகங்கள் மூலம், 1800 வகையான மருந்துகள், 285 அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன் பெறுகின்றனர்.
எய்ம்ஸ் எண்ணிக்கை 23 ஆக உயர்வு: மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவது மட்டுமின்றி மருத்துவ கல்விக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9 வருடங்களுக்கு முன்பு வெறும் 6 என்கிற எண்ணிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் இருந்தன. இப்போது 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு 386 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 706 ஆக உயர்ந்துள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்கு என எய்ம்ஸ் மருத்துவமனை உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒரே நேரத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
'வரும் முன் காப்போம்' என்ற அடிப்படையில் நோய் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, யோக கலையைப் பிரதமர் மோடி முன்னிறுத்தி வருகிறார். இன்று உலகம் முழுவதும் 'சர்வதேச யோகா தினம்' கொண்டாடப்படுவதோடு, உலக நாடுகள் அனைத்தும் யோக கலையைப் பயிற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வருகையையொட்டி, தூத்துக்குடியில் இருந்து தருவைக்குளம் மீனவர்கள் பலரும் கோவைக்கு வந்து மாலத்தீவில் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களை படகுடன் மீட்கக் கோரி மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை அரசு உடனடியாக மீட்காவிட்டால் போராட்டம்: பங்குத்தந்தை வின்சென்ட் தகவல்