கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கந்துவட்டி புகார் வழக்கில் வேலுசாமி, பட்டை சௌந்தர்ராஜன், உதயகுமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "நேற்று 41 இடங்களில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 19 FIR-கள் பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த சோதனையில் 1.26 கோடி பணம், 379 நில சம்பந்தமான ஆவணங்கள், 127 செக் லீப், 48 ATM கார்டுகள், 18 பேங்க் பாஸ் புக், 54 வெற்று கையெழுத்து காகிதங்கள், 211 ஆர்சி புத்தகங்கள், 230 அகவுட் புத்தகங்கள், 3 பாஸ்போர்ட்கள், 7 ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாருக்கேனும் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக புகார் அளியுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஒரு மாதத்திற்கு முன் 3 கந்துவட்டி வழக்குகளில் 2 பேரை கைது செய்துள்ளோம். இந்த நடவடிக்கை மற்றும் சோதனை மேலும் தொடரும். பைனான்ஸில் கந்துவட்டி மேற்கொண்டால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வரவேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நெல்லை அருகே சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி வெட்டி கொலை!