கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் நீதி கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இப்போராட்டத்தினால் சமூகவிரோதிகள் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை பொதுமக்கள் மத்தியில் அமல்படுத்தி வருவதாலும் அவர் அதிமுகவினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருப்பதால் சமூகவிரோதிகள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மேலும், செல்வராஜ் வீட்டில் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அவரது வீட்டிற்கும் அவரது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலைமை உள்ளது.
மேலும் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார். இது ஏதோ உள்நோக்கத்துடன் இருப்பதாகக் கருதி, திமுக புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் திமுகவினர், பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.