பொள்ளாச்சி மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை அடுத்துள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (41). இவருக்குக் கடந்த ஜூலை 24ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனால், அவரது வீட்டில் யாரும் இல்லை என அறிந்த கொள்ளையர்கள், பிரசாத் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, வீட்டிலிருந்த தங்க மோதிரம், காதணி உட்பட 3 பவுன் நகை மற்றும் எல்.சி.டி டிவி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பிரசாத், முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.