கோவை மாவட்டம் சூலூர், அடுத்த சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை (ஜூலை11) மதியம் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் நியாய விலைக்கடை அருகே சாலையின் குறுக்கே உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து சாலையில் விழுந்து கிடந்தது.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் செல்லும் இந்தச் சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றி வரும் செலக்கரிசலை சேர்ந்த சிவகாமி என்பவர் துரிதமாகச் செயல்பட்டு, சாலையில் செல்லும் வாகனங்கள் முன்பு சிவப்பு வர்ணக் கொடியைக் காட்டி எச்சரிக்கை செய்தார்.
பின்னர், இது தொடர்பாக மின்சார வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் வந்து மின்சாரத்தை நிறுத்தும் வரை சுமார் அரை மணி நேரம் வரை சாலையில் சுட்டெரிக்கும் வெயிலில் சிவப்பு கொடியுடன் சிவகாமி வாகன ஓட்டிகளை எச்சரித்துக்கொண்டிருந்தார்.
அவரது முயற்சியை கண்ட அக்கம்பக்கத்தினரும் இணைந்து வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றினர்.
இதனிடையே சமயோசிதமாக செயல்பட்டு பல வாகன ஓட்டிகளின் உயிரை காப்பாற்றிய சிவகாமிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அவர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: ஒரு வழிப்பாதையாக மாறும் கொத்தவால் சாவடி சாலை!