மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்துவந்த கனமழையால் சர்க்கார்பதி மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான மண், கற்கள், மரக்கட்டைகள் உள்ளிட்டவை கான்டூர் கால்வாயில் விழுந்து தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் கால்வாயை விரைவில் சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதின் பேரில் பணிகள் தீவிரமடைந்தன.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு ஆகியோர் நேரில் சென்று சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,
’கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு கால்வாய் அடைக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு பெரிய மண் சரிவு ஏற்பட்டது இல்லை. எனவே அதை சமாளிக்க அணையின் கண்காணிப்பு பொறியாளர், கோட்டாட்சியர், வனத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் இங்கேயே தங்கியிருந்து இரவு பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடைந்து பரம்பிக்குளம் அணையிலிருந்து தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படும்’ என்றார்.