கோவை: திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர், பழனிக்குமார். பனியன் நிறுவனத்தில் தரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஶ்ரீ (34), இவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 11 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுபஶ்ரீ ஈஷா யோகா மையத்தில், சைலன்ஸ் என்ற யோகா பயிற்சி
மேற்கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மீண்டும் ஒருவார பயிற்சிக்காக கடந்த 11ஆம் தேதி காலை 6 மணிக்கு கோவை ஈஷா யோகா மையத்திற்குச் சென்றுள்ளார். ’பயிற்சி முடிவடைந்த 18ஆம் தேதி அவரை அழைத்துச்செல்ல காலை 7 மணிக்குச் சென்று காத்திருந்தேன், 11 மணியாகியும் அவர் வரவில்லை’ என அவரது கணவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனால் பழனிக்குமார் மாலை 3 மணிக்கு உள்ளே சென்று பார்த்தபோது வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்டதாக வரவேற்பாளர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அவரது கணவர் ஆய்வு செய்த போது, சுபஶ்ரீ காலை 9.30 மணிக்கு சர்பவாசல் வழியாக வெளியே வந்து ஒரு டாக்சியில் ஏறி சென்றது பதிவாகி இருந்துள்ளது.
இந்நிலையில் பழனிக்குமாரின் செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. மிஸ்டு கால் பார்த்து அவர் அந்த எண்ணிற்கு திரும்ப அழைத்த போது, ”எனது கணவருக்கு பேச வேண்டும் என ஒரு பெண்மணி என்னிடம் போன் வாங்கிப் பேசினார். போன் எடுக்காததால் திரும்ப என்னிடமே கொடுத்துவிட்டார்” எனக்கூறியுள்ளார்.
மேலும் சுபஸ்ரீ கால் டாக்ஸில் லிஃப்ட் கேட்டு ஏறி சென்று செம்மேடு, முட்டத்துவயல் பகுதியில் இறங்கியதாக கால் டாக்சி டிரைவரிடம் விசாரித்த போது அவர் கூறியதாக பழனிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய மனைவி எங்கு சென்றார் எனத் தெரியவில்லை, அக்கம் பக்கம் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. காணமல் போன தனது மனைவி சுபஸ்ரீயை கண்டுபிடித்து தரவேண்டும் என பழனிக்குமார் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார். புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாயமான சுபஶ்ரீயை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மைதானம் வேணும்' - அமைச்சர் உதயநிதிக்கு பாக்ஸிங் தங்க மங்கை கோரிக்கை