கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செட்டி வீதி பகுதியில் பாழடைந்த கட்டடம் ஒன்று இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கோவை மாநகர ஆணையர், இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அதனை இடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மாநகராட்சி அலுவலர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் சோதனைசெய்து, இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களுக்கு நோட்டீஸ் ஒட்டி, அதனை இடித்துவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை டவுன்ஹால் பகுதியில் இடிந்த நிலையில் இருக்கும் வணிக வளாகம் ஒன்றுக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டவந்தனர்.
இந்நிலையில் அந்தக் கட்டடத்தில் செயல்பட்டுவரும் தலையணை, போர்வை போன்றவைகளை விற்கும் தனியார் கடையின் உரிமையாளர் மாநகராட்சி அலுவலர்களிடம் நோட்டீஸ் ஒட்டக் கூடாது என்றும், கடையை அப்புறப்படுத்துவதற்கு சில நாள்கள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் அந்தக் கட்டடம் மிகவும் பாழடைந்துள்ளதாகக் கூறி மாநகராட்சி அலுவலர்கள், கடையை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் வியாபாரிக்கும், மாநகராட்சி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் அந்த வியாபாரி சாலையில் விழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவரைச் சமாதானப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரமாக கடையை அப்புறப்படுத்தும்படி எடுத்துக்கூறி சமாதானப்படுத்தினர்.
கடையை காலிசெய்ய மாநகராட்சி அலுவலர்கள் கூறியதனால் சாலையில் விழுந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரியால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: தங்கத்தில் முகக்கவசம்: வரிச்சியூர் செல்வம் காணொலி வைரல்