தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதலமைச்சர் ஒவ்வொரு துறையையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து அந்தத் துறையில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. என்னென்ன முன்னேற்றங்கள் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்கிறார். தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயன்படுகிற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களை முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வை என்ற பெயரின் கீழ் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
சென்னை கோவை மதுரை திருச்சி சேலம் போன்ற இடங்களில் துணை நகரங்களை உருவாக்குவதற்கு அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. அதேபோல் நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய மாவட்டங்கள் ஆட்டோ நகரமாக உருவாக்குவதற்கான ஏற்பாடு செய்யப்படுகிறது. வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் கட்டுமான பணிகளில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு குலுக்கல் முறையில் தகுதியான நபர்களுக்கு வழங்கப்படும். அதில் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 1211 சதுர கிலோமீட்டராக உள்ள கோவை மாஸ்டர் பிளானில் மேலும் 1658 சதுர கிலோ மீட்டர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மாஸ்டர் பிளான் ஒன்றரை ஆண்டுகளில் வெளியிடப்படும்” என்றார்.