கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் அருணாச்சலம் என்பவர் உள் வாடகைக்கு பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கடையின் பணி நேரம் முடிந்த நேரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் கணேஷ், மகேந்திரன் ஆகியோரிடம் அருணாச்சலம் மதுபானம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மதுபானம் தர மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அருணாச்சலம் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அருணாச்சலம் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இதனைக் கண்டித்து கோவை மாவட்ட அனைத்து டாஸ்மாக் ஊழியர்களும் ஒன்றிணைந்து, டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் ஊழியர்களை தாக்கிய பார் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறும், சம்பந்தப்பட்டவரின் பார் உரிமத்தை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
போராட்டம் வலுத்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு மாவட்ட வருவாய் மேலாளர் ரேணுகா ராணி, கோவை ஒண்டிப்புதூர் பார் உரிமம் ரத்து செய்யப்படும். ஊழியர்கள் தண்டிக்கப்பட்டது குறித்து பார் உரிமையாளர் அருணாச்சலம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் ஆணையரிடம் பேசுவதாக உறுதி அளித்த பின்னர் டாஸ்மார்க் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.