உயரப் பறப்பது என்றால் அனைவருக்கும் ஒரு அலாதியான ஆசைதான். ஆனால், இந்த மாதிரியான விருப்பங்கள் மேலை நாட்டிலுள்ளவர்களுக்கு தான் நிறைவேறும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதனை மாற்றி, தமிழ்நாட்டில் உள்ள நமக்கும் வானில் கூட்டம் கூட்டமாக இருக்கும் மேகக்கூட்டங்களை தொடும் ஒரு வாய்ப்பை நமது தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.
இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதியை செய்துள்ளது. இதனைத் தவறவிடக் கூடாது என்று நினைத்தால், நாம் போக வேண்டிய இடம் தான் பொள்ளாச்சி. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 8வது சர்வதேச பலூன் திருவிழா (Tamil Nadu International Balloon Festival - TNIBF) இன்று (ஜன.13) கோலாகலமாகத் தொடங்கியது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக இன்று முதல் மூன்று நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.
முதல் பலூன் திருவிழா: கனடா, நெதர்லாந்து, அமெரிக்கா, பிரேசில் உட்பட நாடுகளில் இருந்து 10 வெப்ப பலூன்கள் வரவழைக்கப்பட்டு அவை பறக்கவிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் விதமாக இந்த 'வருண் திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் 'முதல் பலூன் திருவிழா' என சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஒரு பலூன் பறக்க விடப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
வானில் பறக்க ரூ.25,000: மூன்று நாட்களும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பொருட்கள் வானில் பறக்க விடப்படுகிறது. இந்த பலூனில் பறப்பதற்காக ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவை முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வனவிலங்கு பெருக்கம் கட்டுப்பாடு - உச்ச நீதிமன்றத்தை அணுகும் கேரள அரசு!