கோவை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவினர் கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி, "கடந்த அறுபது ஆண்டு காலமாக பிஏபி நீரை நம்பி பிரதான கால்வாயின் இரு புறமும் உள்ள விவசாயிகள் ஆயக்கட்டுக்கு உட்படாத விவசாய நிலங்களுக்கு கிணற்று நீர் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சில விவசாய அமைப்புகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்கப்பிரதிநிதிகள் கொடுத்த வழக்கின்படி, பிஏபி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைகளால் நீண்ட கால பயிர்களான தென்னை மரங்கள் கருகும் அபாயம் உள்ளது.
எனவே, பிரதான கால்வாயின் கரையோரம் உள்ள விவசாயிகளும், விவசாயிகள்தான் என்பதை கருத்தில் கொண்டு, விவசாய கிணறுகளில் மின் இணைப்பைத் துண்டிக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். பிஏபி பாசன திட்டத்தை பலப்படுத்தவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் பல்வேறு வழிகள் உள்ளன. அதைக் கண்டறிந்து செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். அதேபோல் நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பிஏபி பிரதான கால்வாயின் இருபுறங்களிலும் உள்ள விவசாயக் கிணறுகள் மூலம் தண்ணீர் திருட்டு நடப்பதாக புகார் எழுந்த நிலையில், குறிப்பிட்ட கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.