கோயம்புத்தூர்: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் Y20 talk மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
இதில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொழில் துறையில் இந்தியா எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான மாநாடு இது எனவும், பல துறைகளில் இந்தியா முன்னேறி வரும் நிலையில், ஜி20 மாநாட்டை நடத்தி உலகிற்கு வழிகாட்டி வருகிறோம் எனவும் கூறினார். எதற்கு தீர்வு காண வேண்டுமென்றாலும், இந்தியா மற்ற நாடுகளை எதிர்நோக்கி இருந்த சூழலில் தற்போது மற்ற நாடுகள் நம் முடிவுகளுக்காக இந்தியாவை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்திரயானுக்கு விண்கலத்தை அனுப்பிவிட்டோம், புதிய நாடாளுமன்றத்தை கட்டி விட்டோம், 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, இவை அனைத்தும் பாரத பிரதமரின் உறுதியான தலைமையின் கீழ் நிறைவேறி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் காரணங்களுக்காக மாணவர்களை குழப்ப வேண்டாம்: இன்று தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைகளை பின்பற்றுவதிலோ, நீட்டை (NEET) பின்பற்றுவதிலோ என பல விஷயங்களில் சர்ச்சை ஏற்படுள்ளதாக கூறிய அவர், அரசியல் காரணங்களுக்காக மாணவர்களை குழப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
நீட் தேர்வில் மாணவர்களை இன்னும் அதிகமாக சேர்த்து தேர்வு எழுத வைத்து, அதன் மூலம் அவர்கள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என முயற்சி செய்ய வேண்டுமே தவிர, மாணவர்களுக்கு அவநம்பிக்கையை விதைப்பதனால் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளவர்கள் எனவும் அறிவுறுத்தினார்.
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இட ஒதுக்கீடு இல்லாமல் அடுத்த முறை 10 சதவீதத்தைத் தாண்டி அதிக மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்க நாம் வழி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
உதவித் தொகையை தகுதியானவர்களுக்கு பார்த்து கொடுக்க வேண்டும்: தமிழகத்தில் மகளிர் உதவித் தொகை பொறுத்தவரையில், தகுதியானவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்துள்ளதாகவும் கூறிய அவர், இதனால் ஒரே குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பலரும் சொல்லியிருப்பதாகவும், யாரெல்லாம் தகுதியானவர்கள் என பர்த்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மருத்துவ மேற்படிப்பில் ஜீரோ கட் ஆப் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த ஆண்டு அனாடமி, பிசியாலஜி போன்ற துறைகளில் 3,000 முதல் 4,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக கூறினார். மருத்துவத் துறையில் ட்ரீடிங் ஸ்பெஷாலிட்டி, டீச்சிங் ஸ்பெஷாலிட்டி என இரண்டு பிரிவுகள் உள்ள சூழலில், நிறைய பேர் ட்ரீட்டிங் ஸ்பெஷாலிட்டிக்கு செல்வதாகவும், ஆனால் டீச்சிங் ஸ்பெஷாலிட்டியை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை எனவும் அவர் கூறினார்.
இதனால் காலியான இடங்களுக்கு கட் ஆப் மதிப்பெண்களை குறைத்து வாய்ப்புகளை அதிகரித்தால் அதிகமானோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதனாலேயே இப்படி அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கும் தகுதியான நபர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள் எனவும், இந்த வருடத்திற்கு மட்டுமே இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
குழந்தைகள் தயாராக ஆரம்பித்து விட்டார்கள்: தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கின்ற மருத்துவ உலகிற்கு இது ஒரு வாய்ப்பு என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று சொல்வது தவறு என அவர் கூறியுள்ளார். குழந்தைகள் தயாராக ஆரம்பித்து விட்டதாக கூறிய அவர், தமிழகத்தில்தான் வேண்டாம் என்கிறார்கள், ஆனால் மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் எனவும் கூறினார்.
சபாநாயகர் அப்பாவுவின் கருத்து கண்டிக்கத்தக்கது: இதேபோல் தமிழக கல்வித்துறை குறித்து சபாநாயகர் அப்பாவுவின் கருத்தை, தான் வன்மையாக கண்டிப்பதாக கூறிய அவர், இதே கருத்தை இன்னொரு மதத்தைச் சார்ந்தவர்கள் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா என கேள்வியெழுப்பியதுடன், ஒரு மதத்தைச் சார்ந்தவர்களை தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாக கூறினார்.
கமலஹாசன் உதயநிதிக்கு பெருமை சேர்க்க நினைத்து சிறுமை சேர்த்து இருக்கிறார்: மேலும் பேசிய அவர், “சாதியை ஒழிப்பதற்கு சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி சொல்கிறார். ஆனால் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது போன்றவற்றை செய்கிறார்கள். சமுதாய நலம் சார்ந்து நடக்க வேண்டிய பள்ளிகளில் மலம் சார்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்றால் சமுதாயம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்து, முதலில் நாம் அதை சரி செய்ய வேண்டும். ஆனால், அதை விடுத்து இந்தியாவில் எதுவும் சரியாக இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது தவறு.
சபாநாயகர் ஏற்கனவே இது போன்று பேசியிருக்கிறார் என்பதால், இவர் சொல்வது சரியா என்பதை சமுதாயத்திற்கே விட்டு விடுகிறேன். சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை, சின்னப்பையன் பேசியதற்கு எதற்கு கவலைப்படுகிறீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேட்டிருக்கிறார். சின்ன பையனை எதற்கு அமைச்சர் ஆக்கினீர்கள்? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், உதயநிதிக்கு பெருமை சேர்க்க நினைத்து சிறுமை சேர்த்து இருக்கிறார்.
உறுப்பு தானத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்: உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. உறுப்பு தானத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதேவேளையில் உறுப்பு தானத்திற்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உறுப்பு தானத்திற்கு பிறகு வரும் சட்ட ரீதியான பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுப்பதுடன், உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் நிதி உதவிகளை செய்ய வேண்டும்.
பிரதமர் வெளிப்படையான நிர்வாகம் செய்கிறார் என்பது உலகுக்கே தெரியும் என்பதால், சிஏஜி அறிக்கையை நான் நம்பவில்லை. பொருளாதார நிபுணர்கள் இதற்கு கருத்து சொல்வார்கள். 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து விட்டார்களே என்ற ஆதங்கத்தில்தான் காங்கிரஸார் உள்ளனர். பல ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு இன்று உடனே செய்ய வேண்டும், உடனே செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
மேலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி அதிகாரத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, பாஜக. தகுதியான, திறமையான பெண்கள் சேவை செய்ய வேண்டும். தகுதியான பிரிவைச் சார்ந்தவர்களுக்கு தகுதியான இட வாய்ப்பை தர வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறார்கள். பிரதமர் எந்த திட்டத்தை செய்தாலும் சரியாக செய்வார்” என கூறியுள்ளார்.
மேலும், அவர் வைகோ சொன்னது இதுவரை தமிழகத்தில் ஏதாவது நடந்ததா? அவர் எந்த கூட்டணியில் இருக்கிறார்? யாரை எதிர்த்து வெளியே சென்றார் ? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அவர், இதெல்லாம் பெரிய கதை. அதனால் அதை விட்டு விடுவோம் என்றார்.
இரு முதல்வர்களும் பேசி காவிரி விவகாரத்திற்கு தீர்வு காணலாம்: காவிரி விவகாரத்தில் எதிர்கட்சியாக இருக்கும்போது என்னென்ன பேசினீர்கள் எனவும், கர்நாடக அரசு உங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்கள். எனவே இரு முதல்வர்களும் பேசி காவிரி விவகாரத்திற்கு தீர்வு காணலாம் எனக் கூறினார்.
டெல்டாவைச் சார்ந்தவர் என்று பெருமையாக பேசும் முதல்வர், காவிரி விவகாரத்திற்காக அரசியல் அணுகுமுறையை, அரசியல் நட்பை ஏன் பயன்படுத்தவில்லை எனவும், தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு உங்கள் நட்பை ஏன் பயன்படுத்தவில்லை? அது ஓட்டுக்காக மட்டும் தானா? நாட்டுக்காக இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடக்கம்!.. ஏன் இவ்வளவு டிக்கெட் விலை?