கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "பாஜகவில் இணைந்ததில் பெருமையடைகிறேன். பாஜக சாதாரண மனிதனுக்கான கட்சி. தமிழ்நாட்டில் வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பு முனை ஏற்படும்.
தமிழ்நாட்டிற்கு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது. பாஜக தமிழ்நாட்டில் முக்கியமான சக்தியாக உருவெடுக்கும். புதிய கல்விக் கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை. தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கட்சி தலைமை வலியுறுத்தினால் தேர்தலில் போட்டியிடுவேன். பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சியென்று எவ்வாறு சொல்ல முடியும்.
திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது தமிழுக்காக செய்தது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை ஆராய்ந்து பார்க்காமல் எதிர்ப்பது தவறான போக்காகும். இந்தியை விட தமிழுக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இருப்பினும், பல மொழிகளை கற்றுக் கொள்வது நல்லது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சி தடைபட்டு நின்றுவிட்டது. சமூக வலைதளங்களில் விமர்சனம் எனும் குப்பைகளை என் மீது போடுகிறார்கள். அந்த குப்பையில் தாமரையை வளர்ப்போம்" என்றார்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் - திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!