கோயம்புத்தூர்: மாவுத்தம்பதி கிராமம் அருகே மரத்தோட்டம் பகுதியில் கோவை, பாலக்காடு இடையேயான ரயில்வே தண்டவாளத்தின் தண்டவாளத்தில் நேற்று (நவ.27) இரவு மங்களூரு-சென்னை அதிவேக ரயில் 3 யானைகள் மீது அதிவேகத்தில் மோதியது. இதில் 2 யானைகள் தூக்கி வீசப்பட்டதோடு, ஒரு யானை தண்டவாளத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்தில் 3 யானைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், யானையின் உடல்களை அப்புறப்படுத்தி, உடற்கூராய்வு மேற்கொண்டனர்.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட வனத்துறையினர்
இதில் உயிரிழந்தவை 25 மற்றும் 8 வயதுடைய 2 பெண் யானைகள் என்பதும், ஒரு தந்தம் இல்லாத 12 வயது மக்னா வகை ஆண் யானை என்பதும் தெரியவந்தது. மேலும் உயிரிழந்த பெண் யானையின் வயிற்றில் 3 மாத கரு இருந்ததும் தெரியவந்தது. கருவுற்ற யானையின் வயிற்றில் இருந்து யானை சிசு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக ரயில் ஓட்டுனர்கள் சுபைர், அகில் ஆகியோரை தமிழ்நாடு வனத்துறையினர், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ரயில் இயக்கப்பட்ட வேகம் குறித்து விசாரணைக்காக தமிழ்நாடு வனத்துறையில் பணிபுரியும் வனவர் அருண்சிங், அய்யப்பன், வனகாப்பாளர்கள் சசி, பீட்டர் உட்பட ஐந்து பேர் கேரளா சென்றனர்.
அப்போது வனத்துறையினரை பாலக்காட்டில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் ரயில்வே நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் ரயில் எஞ்சினில் இருந்து ஸ்பீடோ மீட்டரை கழட்டியதாகவும், அதனால் தமிழ்நாடு வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் மிரட்டியதுடன் காவல் நிலையத்திலேயே சீருடையுடன் அமர வைக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிப்பு
இது குறித்து தகவலறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்பினர், கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள மலையாளி சமாஜ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து மலையாளி சமாஜ் அலுவலகம் முன்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இருப்பினும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அலுவலர்களை சட்டவிரோதமாக சிறைபிடித்த கேரள ரயில்வே காவலர்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழ்நாடு வனத்துறை உயர் அலுவலர்கள், கேரள அலுவலர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு வன ஊழியர்கள் ஐந்து பேரும், சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே விரைவாக ரயிலை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுனர்கள் சுபைர் மற்றும் அகில் ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: Be careful: யார் ஏரியாக்குள்ள, யாருடா லந்து கொடுக்குறது!