கோயம்புத்தூர்: தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கோவையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த போலீசாருக்கும் பரிசு, பாராட்டு பத்திரங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திர பாபு பேசியதாவது: "கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் போலீசார் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். கோவை மாநகரில் தற்போது 15 காவல் நிலையங்கள் உள்ளன. மேலும் 3 காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் அதிகாரிகள், போலீசார் நியமிக்கப்படவுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ஒப்பிடுகையில் 15 சதவீத கொலைகள் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆயிரத்து 597 கொலைகள் இதே காலக்கட்டத்தில் நடந்திருந்தது. இந்த ஆண்டு இது ஆயிரத்து 368-ஆக குறைந்துள்ளது. கொலைகள் குறைவது சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளதற்கான அறிகுறியாகும். இதேபோல ஆதாயக்கொலைகள், கொள்ளைகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.
பல்வேறு குற்றச்சம்பவங்களில் துப்பு துலக்குவதற்கு சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. அதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன. நவீன சிசிடிவி கேமராக்கள் பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் 75 ஆயிரம் பழைய குற்றவாளிகளின் தகவல்களுடன் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு குற்றவாளியை தனது மொபைலில் படம் பிடித்தாலே அவர் மீது என்னென்ன வழக்குகள் உள்ளது, அவரது பெயர் முகவரி என்று அனைத்து விபரங்களும் முகத்தின் மூலமே அடையாளம் காணும் வகையில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
அதேபோல வாகனங்களின் எண்களை வைத்து உடனடியாக உரிமையாளர்களை கண்டுப்பிடிக்கும் சாப்ட்வேரும் தமிழக போலீசாருக்கு கிடைத்துள்ளது. கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க, பொள்ளாச்சி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் 6 செக்போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதிகரிக்கும் சைபர் கிரைம் மோசடிகள்
தற்போது இணைய மோசடிகள் புதிய டிரண்டிங்காக உள்ளது. நவம்பர் மாதம் வரை 45 ஆயிரம் சைபர் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வங்கியிலிருந்து பேசுவது போலவும், மின்சார வாரியத்திலிருந்து பேசுவது போலவும் பேசி மோசடியில் ஈடுபடுகின்றனர். வங்கிகள் முதற்கொண்டு அரசு நிறுவனங்கள் யாரும் மக்களிடம் பாஸ்வார்டு, ஓடிபி போன்றவற்றை கேட்கமாட்டார்கள்.அதனை யாரிடமும் பகிர வேண்டாம் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் இந்த மோசடியில் இருந்து தப்பிக்க முடியும்” இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க:சிறையில் மரணமடைந்த அரியலூர் விவசாயி வழக்கு: சிபிஐக்கு மாற்றப்படுமா?