கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் 121 இடங்களில் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 32 இடங்களில் உள்ள 45 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சூலூர் தொகுதியில் 15 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி, அமமுக சார்பில் சுகுமார், மநீம சார்பில் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் உள்ளிட்டோர் களமிறங்கினர்.
இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 743 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்கள் உள்ளனர். இதையடுத்து வாக்குப்பதிவான காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை பதிவு செய்தனர். கண்ணம்பாளையம், எலச்சிபாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் அரைமணி நேரம் வரை வாக்குப்பதிவு தடைபட்டது.
சூலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரம் தலைகீழாக வைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் காரணமாக அதிமுகவினர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதான இடங்களில் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
சூலூர் இடைத்தேர்தலில் மொத்தம் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 1 லட்சத்து 14 ஆயிரத்து 971 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 407 பெண் வாக்காளர்கள் மற்றும் இரண்டு திருநங்கைகள் உட்பட 2 இலட்சத்து 34 ஆயிரத்து 380 பேர் வாக்களித்துள்ளனர். 60 ஆயிரத்து 778 பேர் வாக்களிக்கவில்லை. அதே சமயம் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் 75.60 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், அதைக் காட்டிலும் 3.81 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றது.
இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன், கோவை நகரின் தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.