கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் காலமானார். இதையடுத்து, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளுடன் மே மாதம் 19ஆம் தேதி சூலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நேற்று மாலை வரை ஆறு நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் ஏழு வேட்புமனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடைசி இரண்டு நாட்களில் அதிகளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாளான நேற்று மட்டும் அதிமுக வேட்பாளர் கந்தசாமி, அமமுக வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மயில்சாமி உள்ளிட்ட 32 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதே போன்று 10 ரூபாய் சில்லரை காசுகளை பானையில் எடுத்து வந்த தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் பழனிச்சாமி, இரண்டு ஆண்டுகளில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பதவி விலகுவேன் என்ற பத்திரத்துடன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.