கோவை: கோவையின் கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் சிவதர்ஷினி(14). தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறு வயதில் இருந்தே தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால், தமிழ் நூல்களை படிப்பது, கவிதை எழுதுதல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 3 நிமிடம் 10 வினாடிகளில், 50 திருக்குறள்களைக் கூறி பதிவு செய்து, அதனை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிற்கு சிவதர்ஷினி அனுப்பியுள்ளார். அங்கு சிவசங்கரியின் சாதனையை பரிசீலித்த குழுவினர், தற்போது இவருக்கு சாதனைக்கான விருதினை அளித்துள்ளனர்.
மாணவியை பாராட்டிய ஆட்சியர்
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரண், மாணவி சிவதர்ஷினியை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் என அந்த பகுதியை சேர்ந்த அனைவரும் சிவதர்ஷினியின் சாதனைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருக்குறள் தொன்மையான தமிழ் மொழி இலக்கியம் ஆகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு நூல் திரட்டில் இடம் பெற்றிருக்கும் திருக்குறளானது, குறள் வெண்பா என்னும் பாவகையினாலான ஆயிரத்து 330 ஈரடிச் செய்யுளைக் கொண்டது.
இந்நூல் அறம், பொருள், இன்பம் என மூன்று தொகுப்புகளைக் கொண்டது. அடிப்படையில் வாழ்வியல் நூலான இது, வாழ்வில் இன்பமுற்று வாழத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. திருக்குறளானது பொதுத்தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.
கடைச்சங்கத்தின் கடைசிப் பதிப்பு
இந்த நூலை கி.பி.450 முதல் 500 வரையிலான காலகட்டத்தில், திருவள்ளுவர் இயற்றியதாக அறியப்படுகிறது. திருக்குறளே கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்படுகிறது.
இவ்வளவு சிறப்புகள் நிறைந்த திருக்குறளை மாணவர்களின் வாழ்வியலோடு இணைக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றது. இதனை ஊக்கப்படுத்தும் விதத்தில் திருக்குறள் ஒப்புவிப்பில் சாதனை நிகழ்த்தும் மாணவர்களுக்கு விருதுகள் அளித்து உற்சாகப்படுத்துவது பாராட்டுதலுக்குரியது.
இதையும் படிங்க: தேசிய நல்லாசிரியர் விருது - தமிழ்நாடு ஆசிரியர்கள் 2 பேர் தேர்வு