கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த 25ஆம் தேதியிலிருந்து தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதனால் பெருவாரியான நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்யக்கோரியுள்ளன.
இதில் அதிகபட்சமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களே வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளைச் செய்து வருகின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஊழியர்களில் சிலர் அலுவலகத்தில் வேலை புரிவதை விட வீட்டிலிருந்து பணிபுரிவது எளிதாக இருக்கிறது என்கின்றனர். மற்றவர்களோ வீட்டிலிருந்து வேலை பார்ப்பதை விட அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்ப்பது எளிதாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய ரத்னவேல் (வீட்டிலிருந்து வேலை செய்யும் ஐடி ஊழியர்), ”அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, குறிப்பிட்ட நேரம் வரை தான் வேலை செய்ய முடியும். ஆனால் தற்போது அலுவலக நேரத்தை விட ஓரிரு மணி நேரம் அதிகமாக வேலை பார்த்து ஊதியத்தை உயர்த்திக் கொள்ள முடிகிறது. மேலும் அலுவலகத்தில் தங்களுக்கான பணி வரவில்லை என்றாலும், அங்கேயே அமர்ந்துகொண்டு கணினியை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதனால் சில நேரங்களில் சோர்வை ஏற்படுத்தும். ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, வேலையில்லாத சமயங்களில் வீட்டிலிருக்கும் பெற்றோர்களுடன் நேரத்தைக் கழித்து நிம்மதியாக வேலைசெய்ய முடிகிறது. அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, ஏதோ நான்கு சுவருக்குள் அடைத்துவைத்தது போன்று தோன்றும். ஆனால் வீட்டில் இருக்கும்போது அதுபோன்ற எண்ணம் இல்லை. மனம் அமைதியாக இருக்கிறது” என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய இளங்கோ (வீட்டில் இருந்து வேலை செய்பவர்), வீட்டிலிருந்து வேலை செய்வது, அலுவலகத்தில் வேலை செய்வது போல் எளிதான ஒன்று அல்ல. அலுவலகத்தில் வேலை செய்யும்போது ஒரு குழுவாக இணைந்து, ஒரு பணியைச் செய்யலாம். அப்போது, தங்களுக்குத் தெரிந்த யோசனைகளைப் பிறரிடம் பகிர்ந்து வேலைசெய்வோம்.
ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பே இல்லை. அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் உயர் அலுவலர்களிடம் எங்களுக்குப் புரியாத விஷயத்தை, கேட்டுத் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். ஆனால், தற்போது ஒவ்வொரு முறையும் அவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொள்ள வேண்டியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: கோவையில் மழையால் வீடுகள் சேதம்!