கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை மலைப்பாதையில் சிறுத்தை புலி, கரடி, காட்டு மாடு, காட்டு யானைகள் உள்ளிட்ட விலங்குளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதில் ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் இரவு நேரங்களில் விலங்குகள் வனத்திலிருந்து வெளியேறி சாலையோரம் செல்கிறது.
அதிலும், வால்பாறை மலைப்பாதை சாலையில் ஐந்து முதல் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவுகளில் கடந்து செல்லும் வரையாடுகளை, அந்த வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர். இந்தக் காட்சி முனையில், சுற்றுலாப் பயணிகள் குறிப்பிட்ட சில நிமிடமே நின்று செல்லவேண்டும் என்று அவ்வப்போது வனத் துறை அலுவலர்கள் அறிவுறுத்திச்செல்கின்றனர்.
இருப்பினும், அங்கு வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் பலர் ஆர்வமிகுதியால் கொண்டை ஊசி காட்சி முனையில் நின்று வெகுநேரம் பொழுதை கழிப்பதுடன் ஆபத்தை உணராமல் தடுப்புச் சுவரில் ஏறி புகைப்படம் எடுப்பதைத் தொடர்ந்துள்ளனர்.
எனவே, அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், வேகத்தை குறைக்க வேண்டும். வாகனங்களை விட்டு இறங்கி, உணவு வழங்கக் கூடாது. அவ்வாறு விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் விதிமீறல் செயலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் பலர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பயணி தவறவிட்ட நகையைத் தேடி, ஒப்படைத்த அரசுப் பேருந்து ஊழியர்கள்