பொள்ளாச்சி நகரில் ரூ.34 கோடியில் செலவில் சாலை விரிவாக்கப் பணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. பொள்ளாச்சி கோவை சாலையில் சி.டி.சி. மேடு பகுதியிலிருந்து, உடுமலை சாலை வழியாக மரப்பேட்டை பாலம் வரை உள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளித்து மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. ரூ.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
அதில், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நாளைய முதலமைச்சர் எனக் கூறிக்கொண்டிருந்தார். இப்போது அவரது மகன் ஆறு மாதத்தில் திமுக ஆட்சி பிடிக்கும் எனவும், ஸ்டாலின் முதலமைச்சர் எனவும் சொல்லிவருகிறார்.
ஸ்டாலின் கனவில்கூட முதலமைச்சராக வர முடியாது. கரோனா காலத்தில் மக்கள் உயிருக்குப் பயந்து இருந்த நிலையில், ஸ்டாலின் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தார். மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற்று மக்களை ஏமாற்றினர். திமுகவில் அப்பா, மகன், பேரன் எனக் கட்சி செயல்படுவதால் திமுகவினர் விரக்தியில் உள்ளனர்.
வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட இடங்கள் கூட்டணி கட்சிகளுடன் வென்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்'' என்றார்.
இதையும் படிங்க: திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் - கடம்பூர் ராஜு