கோவை: 500 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலான பொன்னிவளநாட்டை பொன்னர்-சங்கர் என்ற இரு சகோதரர்கள் அரசர்கள் ஆண்டனர். கொங்கு வேளாளர் தலைவர்களாக விளங்கிய பொன்னர், சங்கர் என்னும் இரு சகோதரர்களின் வரலாறு 'குன்னுடையான் கதை' என்றும் 'அண்ணன்மார் கதை' என்றும் அழைக்கப்படும். இவர்களுக்கு அருக்காணி என்னும் தங்கையை மையமாக இக்கதை கொண்டுள்ளது. கதையின் இறுதிக் கட்டமான 'படுகளம்' அருக்காணியை மையமாகக் கொண்டது. கதைத் தலைவர்களாகிய பொன்னர்- சங்கர் இருவரும் 'அண்ணன்மார்' என்று அழைக்கப்படுவதும் தங்கையின் நோக்கில் இருந்துதான்.
தன் அண்ணன்களைப் பெரியண்ணன், சின்னண்ணன் என்று அருக்காணி அழைப்பதும் இக்கதையை மக்கள் காலப்போக்கில் சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை என்று குறிப்பிடுகின்றனர். அதுவே, அண்ணன்மார் சாமியாகி உள்ளது. இக்கோயில்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன. இதனிடையே, பெரும்பாலான இடங்களில் இக்கோயிலில் ஆடுகளை பலியிடுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இருப்பினும் சில அண்ணன்மார் கோயில்களில் பன்றிகளை பலியிடுவது (Pig sacrificed in Sri Annamar kovil Festival) காலம் காலமாக தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் பழமையான அண்ணன்மார், பட்டத்தரசி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2019ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு இக்கோயில் திருவிழா கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.
இத்திருவிழாவையொட்டி, அப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 'பன்றி குத்துதல்' நிகழ்வு கடந்த அக்.30ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, பொன்னர்-சங்கர் வரலாற்றில் வருவது போல் தங்கைக்கு அண்ணன்கள் இருவரும் 'கிளி பிடிக்கும் நிகழ்வு' நடைபெற்றது. இதில் கோயில் பூசாரிகள் கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்து விவசாய நிலத்தில் உள்ள வாழை மரத்தில் கிளி பிடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர், அங்கிருந்து ஊருக்குள் கிராம மக்கள் கோயிலுக்கு நேர்ந்து விட்ட 30-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக பன்றிகளை அழைத்துச் சென்றனர். இந்த பன்றி ஊர்வலத்தை 'கொம்பன் ஊர்வலம்' என அழைக்கும் கிராமமக்கள், அப்பன்றிகளை கோயிலில் பலியிட்டு வழிபட்டனர். மேலும், தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் பன்றிகள் கோயிலுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தொழில் வளம் பெறுக விவசாயம் செழிக்க கிராமமக்கள் ஒற்றுமையுடன் இருக்க இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் கிராம மக்களின் ஒற்றுமையை பறைசாட்டும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் இத்திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்வதாகவும், பொன்னர்- சங்கர் வரலாற்றில் இக்கோயில் குறித்த கதை இடம்பெற்றுள்ளதாகவும், 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பன்றி குத்தும் திருவிழா நடைபெறுவதாகவும் இக்கிராமமக்கள் தெரிவித்தனர். சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்து சென்று பலியிடும் வினோத நிகழ்வை பார்ப்பதற்காக அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அப்பகுதியை சேர்ந்த கணேச மூர்த்தி, நூறாண்டு பழமையான இந்த அண்ணமார் கோயிலில் கரோனா காலத்திற்கு பிறகு, இந்தாண்டு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. மழை பெய்து விவசாயம் செழிப்பதற்காக நடத்தும் இத்திருவிழாவால், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் மழை பெய்யும்.
இந்த திருவிழாவில் அன்னூரை சுற்றியுள்ள அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொள்வார்கள். நேர்த்திக்கடனாக ஆடுகள், பன்றிகள் ஆகியவற்றை பலியிடப்படும். 15 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் 'படிதம் பாடு' என்ற பெயரில் அண்ணன்மார் கதைகளை ஒவ்வொரு இரவிலும் பாடப்படும்' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய மயில்சாமி கூறுகையில், '4-லிருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடக்கும். குறிப்பாக, பொன்னிவளநாட்டின் அண்ணன்மார் கதையை மக்களிடையே சென்றடைய வைத்து அவர்களின் வரலாற்றை உணர்த்தும் விதமாக இந்த திருவிழா நடைபெறும். இதில் கிளி பிடித்தல், தேரோட்டம் போன்றவை முக்கிய நிகழ்வாகும். இதற்கு அடுத்தப்படியாக, பன்றி குத்துதல் என்ற நிகழ்வு வெகுசிறப்பாக நடந்துள்ளது. எந்த பேதமுமின்றி அனைத்து தரப்பு மக்களும் இணைந்து தொன்றுதொட்டு கொண்டாடும் இவ்விழாவை சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கிறோம்' என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சந்திரயான் 3 குறித்து பள்ளிப் பாட புத்தகத்தில் இடம் பெறும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி