உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பரப்புரைக்காக கோயம்புத்தூர் வந்தார். புலியகுளம் பகுதியிலிருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கி, பொதுக்கூட்டம் நடைபெற்ற ராஜவீதி தேர்முட்டிப் பகுதிக்கு பாஜகவினர் செல்ல திட்டமிட்டனர்.
ஆனால், அந்தப் பேரணிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து பாஜகவினர் டவுண்ஹால் பகுதியில் இருந்த கடைகளை மூடச் சொல்லி கல்வீச்சில் ஈடுபட்டது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகின.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று, அதன் உரிமையாளர்களிடம் சம்பவம் குறித்து நேற்று (ஏப். 1) கேட்டறிந்தார்.
இந்நிலையில் இன்று (ஏப். 2) அப்பகுதிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்றார். பின்னர் கடைகாரர்களிடம் எந்தவிதமான சாதி, மத, பிரச்சினைகளுக்கும் அதிமுக அரசு துளியும் இடமளிக்காது எனவும், அனைவரும் சகோதரத்துவத்துடன் பாதுகாப்பாக வாழ்வதற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்றும் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பேரலாகிவிட்டது பெண்களின் இடுப்பு' - லியோனி கிண்டல்