முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சரும், தற்போதைய அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணியின் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள், அலுவலகங்களில் கடந்த 10, 11 ஆகிய தேதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல, சென்னையில் தங்கியிருந்த எஸ்.பி. வேலுமணியிடமும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து கோவை விமானநிலையம் வந்த அவருக்கு, ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டு, மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மேல் பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன் காரணமாக, எனது உறவினர்கள், எனக்கு சம்பந்தமில்லாத நிறைய இடங்களில் காவல்துறையை ஏவி திமுக அரசு சோதனையை நடத்தியது.
எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், அதிமுக எம்எல்ஏக்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். என்னை சகோதரனாகப் பாவித்து உறுதுணையாக இருந்த தொண்டர்களுக்கும், தோழர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கோவையில் 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. நான் அமைச்சரான பிறகு 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை அளித்ததன் காரணமாக இந்த அளவுக்கு எனக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
என்மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டரீதியாகச் சந்திப்போம். மக்கள் எங்கள் பக்கம் இருப்பார்கள். கிராம சாலைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் என்று பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுக கட்சி தொடர நானும் ஒரு முக்கிய காரணம்" என்றார்.
கோவையில் கரோனா படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், ஒரே நேரத்தில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாமல் விமான நிலையத்தில் அதிமுகவினர் ஒன்றுகூடியது கரோனா தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- முதலமைச்சர்