கேரளாவில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், மழைப்பொழிவு குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால், கோயம்புத்தூர் குற்றாலத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளம் ஆர்ப்பரித்து வருகிறது. மேலும் மலைப்பகுதிகளில் உள்ள சிறு சிறு அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், இவை அனைத்தும் சேர்ந்து நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நீர்வரத்து அதிகரிப்பால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கோவை குற்றாலத்துக்குச் சுற்றுலா பயணிகளை அனுமதிக்காத சூழலில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அங்கு ரம்மியமான சூழல் காணப்படுகிறது.சில மாதங்களாக கோவை குற்றால அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வன விலங்குகளுக்கும் தேவையான குடிநீர் கிடைக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.