கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா உள்ளிட்டா பல்வேறு நாடுகளுக்கு விமான சேவை உள்ளது. நாள்தோறும் பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் கோவை வந்துள்ளது.
அதிலிருந்த 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை, சுங்கத்துறை அதிககாரிகள் எடுத்து பார்த்தபோது, அதில் அரிய வகை பாம்பு, சிலந்தி, ஓணான், நண்டு உள்ளிட்டவை இருந்துள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பேசி விமான நிலையத்துக்கு வரவழைத்துப் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் டோம்னிக், ராமசாமி என்பது தெரியவந்தது. மேலும், இவர்களுடன் வந்த மேலும் ஒருவரை சுங்கத்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுடன் சுங்கத்துறை ஆலோசித்து வருகின்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தனியார் கண்காட்சி மையத்தில் வைப்பதற்காக இவை கடத்தி வரப்பட்டுள்ளது. இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைப் பாதுகாக்க வனத்துறையினர் சார்பில் ஆலோசனை வழங்கி வருவதாக' தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக, பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது மிக முக்கியமான விவகாரம்" - தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து