கோயம்புத்தூர்: மதுக்கரை, திருமலையம்பாளையம், பெரியகுயிலி, செட்டிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் குவாரிகளிலிருந்து கேரளாவிற்கு முறையான அனுமதியின்றி கற்கள், எம் - சாண்ட் மண், பெரிய பாறைகள் போன்றவை கொண்டுசெல்லப்படுகின்றன.
கேரளாவிலிருந்து வரும் கனரக வாகனங்கள், அதிக அளவில் கனிமங்களை எடுத்துச் செல்லும் நிலையில், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) கனரக வாகனங்களை திருமலையாம்பாளையம் பகுதி மக்கள் பிடித்து கந்தே கவுண்டன்சாவடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அந்தக் கனரக வாகனங்களை கனிமப்பொருள்களுடன் பறிமுதல்செய்த காவல் துறையினர் அவற்றிற்கு அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் அந்த வாகன உரிமையாளர்கள் கேரளாவிலிருந்து வராத நிலையில், அவற்றை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 23) இரவு கேரளாவிலிருந்து பெரியகுயிலி பகுதிக்கு பத்துக்கும் மேற்பட்ட கேரள கனரக வாகனங்கள் கனிமப்பொருள்களை எடுத்துச் செல்ல வந்தன.
ஆனால் அந்த வாகனங்களில் கனிமப் பொருள்களை ஏற்றவிடாமல் தடுத்த பொதுமக்கள் கனரக வாகனங்களைத் திருப்பி அனுப்பினர்.
தமிழ்நாடு கேரள எல்லையோர கிராமங்களிலிருந்து முறையான அனுமதியின்றி கேரளாவிற்கு கற்கள், எம்-சாண்ட் மண் போன்ற கனிம வளங்களைச் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்பவர்கள் மீது கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் கனிம வளங்கள் எடுக்கத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், இதனைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும், பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு தோல்வி பயம் - கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான மாணவர் மீட்பு