கோயம்புத்தூர்: மினி உலக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான உலக கோப்பை போட்டி வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை உக்ரைனில் நடைபெறுகிறது. இப்போட்டியில் முதல் முறையாக இந்தியா பங்கேற்க உள்ளது.
தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகள்
இதில் இந்தியாவில் இருந்து 17 ஆண்களும், 12 பெண்களும் தேர்வாகியுள்ளனர். அதில் சவுமியா, ஜெயஸ்ரீ, ஹெப்சியா, சஞ்சனா, தர்சினி, ஜோஸ்வா என்ற 6 பேர் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் ஆவர்.
இவர்கள் அனைவரும் ஊட்டியை சேர்ந்தவர்கள். அவர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு கோயம்புத்தூரில் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மினி கால்பந்து அசோசியேசன் நிர்வாகிகள் கூறியதாவது, “கடந்த 2008ம் ஆண்டு மினி கால்பந்து அறிமுகமானது. இந்தியாவிலும் அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரசு உதவ வேண்டும்
அதன் பிறகு இந்தியா முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திலும் அசோசியேஷன் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
முதன்முறையாக மினி கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்கிறது. இதில் பங்கற்கும் வீரர்களை ஊக்குவிக்கவும், உதவிகளை செய்யவும், மத்திய மாநில அரசுகள் முன்வந்தால் உதவியாக இருக்கும்.
தற்பொழுது வீரர்கள் சொந்த செலவில் தான் செல்கின்றனர். அரசு உதவினால் அரசு பள்ளி மாணவர்களுக்கும், ஏனைய வீரர்களுக்கும் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நிறைவடைந்த டோக்கியோ ஒலிம்பிக்... அமெரிக்கா முதலிடம், 48ஆவது இடத்தில் இந்தியா!