தமிழ்நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் 1,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னைக்கு அடுத்தப்படியாக கோவையில்தான் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கோவையில் இதுவரை 134 பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பணியில் ஈடுபட்டுவரும் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 60 காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், போத்தனுர் காவல் நிலையத்தில் நான்கு காவலர்கள், குனியமுத்தூரில் ஒருவர், ஆயுதப்படை காவலர் ஒருவர் என மொத்தம் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை 544 காவலர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 538 காவலர்களுக்கு கரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட ஆறு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்கள் சீல் வைக்கப்பட்ட பகுதியில் பணியில் இருந்தவர்கள் என்பதால் அதன் மூலம் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து கோவை போத்தனூர் காவல் நிலையத்தை மூடவும் தற்காலிகமாக மண்டபத்தில் சில நாள்கள் போத்தனூர் காவல் நிலையம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு பணியாற்றிய அனைத்து காவலர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர சிறுமுகை பகுதியில் ஒரு பெண்ணிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட 20 வயது இளம்பெண்ணை சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிப்பதால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா பீதி: துபாய்க்கே திருப்பி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம்!