கோயம்புத்தூர்: வால்பாறை அருகே கேரள மாநில எல்லை பகுதியான மளுக்கப்பாறையில் இருந்து கேரளா சாலக்குடிக்கு செல்லும் அடர்ந்த வனப் பகுதியில் கபாலி என்ற ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இந்த நிலையில் மளுக்கப்பாறை - சாலக்குடி வனப்பகுதி சாலையில், ஆணக்காயம் மற்றும் அம்பலப்பாறை இடைப்பட்ட பகுதியில் செல்லும் வாகனங்களை துரத்துவது, சாலையை விட்டு இறங்கி வனப் பகுதிக்குள் செல்லாமல் நீண்ட நேரம் சாலையில் நின்று பயணிகளை அச்சுறுத்துவது என கடந்த 10 நாட்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.
குறிப்பிட்ட பகுதியில் பேருந்து, இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் உயிர் பயத்தில் பயணம் செய்ய வேண்டிய உள்ளது. இந்நிலையில் ஒற்றை யானை ஒன்று கேரள அரசு பேருந்தை நீண்ட நேரமாக வழிமறித்து அட்டகாசம் செய்தது.
பேருந்து ஓட்டுநர் யானையிடம் இருந்து சாமர்த்தியமாக பேருந்தை பின்னோகி ஓட்டிச் சென்று பயணிகளை காப்பாற்றினார். மேலும் வழி விடாமல் பிடிவாதம் பிடித்த யானையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன கொடியேற்றம்!