மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பல்வேறு கட்சியினரும், மத்திய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். இதில் திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தின்போது ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.