கோயம்புத்தூர்: கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் காரை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முபினின் நெருங்கிய உறவினர்களான அப்சர் கான், முகமது அசாருதீன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், முதலில் உக்கடம் காவல் துறையினர் இந்த வழக்கை விசாரித்த நிலையில், பின்னர் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதன் பிறகு உயிரிழந்த ஜமேஷா முபின் மற்றும் கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்புலமும், இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்த ஜமேஷா முபின் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், இதன் மூலமாக இந்த கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதும் தெரிய வந்தது.
மேலும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத அடையாளங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து, இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு சிறப்பு நுண்ணறிவு காவல் துறையினரும் சந்தேகத்துக்கு இடமானவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் கோவையில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்காணிப்பதற்காக சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பாடுகள் இருப்பதாகக் கூறி ஒசாமா என்ற சுலைமான் மற்றும் அப்துல் காதர் ஆகிய இருவரின் வீடுகளில் இன்று (ஜூன் 7) காலை சிறப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் மற்றும் கோவை மாநகர காவல் துறையினர் இணைந்து திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் இருவரது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், இவர்களது வீடுகளில் இருந்து சில ஆவணங்களையும் காவல் துறையினர் கைப்பற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்கு இடமான இருவரையும் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதே போன்று மேலும் சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவும் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. முன்னதாக, சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிடுவது உள்ளிட்ட பல்வேறு சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைகளில் இவர்கள் இருவரும் ஈடுபட்டு வந்ததால், தற்போது இவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் பிரமுகர் அதிரடி கைது.. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?