கோவை: நாட்டில் திருமணமாகி எத்தனையோ தம்பதிகள் குழந்தைப்பேறு வேண்டி கோயில் கோயிலாக செல்கின்றனர். வேண்டுவோருக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைப் பேறு கிடைத்தும் கிடைக்காமலும் இருந்து வருகிறது.
குழந்தையை மீட்ட காவல்துறை
இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்துள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் 10ஆவது வார்டுக்கு உட்பட்ட குப்பைத் தொட்டியில் நேற்று இரவு பிறந்த பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் வைத்துள்ளனர்.
அவ்வழியே சென்ற பொதுமக்கள் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு குப்பைத் தொட்டிக்குச் சென்று பார்த்த பொழுது பிறந்த சில நாளே ஆன பெண் குழந்தையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்து இருப்பது தெரியவந்துள்ளது.
பின் பொதுமக்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததன் பேரில், வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு வார்டில் வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பொள்ளாச்சியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து துணைக் கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி உத்தரவின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வளர்க்க முடியாமல் பெண் குழந்தையை அலுவலர்களிடம் ஒப்படைத்த தம்பதி