கோயம்புத்தூர்: டெல்லியில் இருந்து கோவைக்கு ரயில் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மதுரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் கோவை ரயில் நிலையத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
நைஜீரிய இளைஞரிடம் சோதனை
அப்போது ரயிலில் பனியன் பொருள்களுடன் வந்த நைஜீரிய இளைஞர் ஒருவரை சோதனை செய்தனர். அதில் மெத்தாம்ஃபட்டமைன் போதைப் பொருளை அவர் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மதுரையில் விசாரணை
பின்னர் 2.3 கிலோ எடையுள்ள 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மெத்தாம்ஃபட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது போதைப்பொருளை கடத்திவந்த இளைஞர் எக்வின் கிங்ஸ்லி என்பரை அலுவலர்கள் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
இளைஞர் சிக்கியது எப்படி?
எக்வின் கிங்ஸ்லியுடன் வந்த மற்றொரு நபர் கொடுத்த தகவலின் அடிப்படையில், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல் துறையினர் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கூரியர் நிறுவனத்தின் பூட்டை உடைத்து திருட்டு!