கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி மதியம் குனியமுத்தூர் பகுதியில் ரகு என்ற இந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் எரிபொருள் ஊற்றி பற்றவைக்கப்பட்டது.
அதேபோல அதே நாள் காலை 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக பிரமுகர் பரத் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் வழக்கு பதிவு செய்தோம். இந்த வழக்குகளில் முதல் சம்பவத்திற்கு இந்திய தண்டனைச் சட்டம் 435, வெடி மருந்து வழக்கு, இரு சமூகத்திற்கு பிளவு ஏற்படுத்துவது போன்ற பிரிவுகளில் பதிவு செய்தோம்.
அடுத்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டம் 436, வெடி மருந்து வழக்கு, இரு சமூகத்தினருக்கிடையே பிளவு ஏற்படுத்துவது போன்ற வழக்குகளை பதிவு செய்தோம். இந்த ஒவ்வொரு வழக்கிலும் தனித்தனியாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு நுண்ணறிவு பிரிவு மற்றும் சிசிடிவி ஆய்வின் மூலம் புலன் விசாரணை செய்தோம். இதில் இன்று 4.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மதுக்கரையைச் சேர்ந்த ஜேசுராஜ்(34), குனியமுத்தூரை சேர்ந்த இலியாஸ்(34) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டு நிகழ்வுகளிலும் சம்பந்தப்பட்டவர்கள். இவர்களை குனியமுத்தூர் ஆய்வாளர் கைது செய்துள்ளார். இவர்கள் இருவரும் எஸ்.டி.பி ஐ நிர்வாகிகளாக உள்ளனர். இவர்கள் இன்று விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவர்.
கோவை நகரில் இதுபோன்ற ஆறு வழக்குகளிலும், ஒரு பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கும் உள்ளது. மேலும் மீதி உள்ள வழக்குகளிலும் முன்னேற்றம் உள்ளது. மற்ற குற்றவாளிகளை நெருங்கி விட்டோம். மேலும் குற்றங்கள் நடக்காமல் இருக்க பல்வேறு படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு மதங்களைச் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அழைத்து மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து பேசி உள்ளோம். அனைவரும் ஒத்துழைப்பு தந்து வருகின்றனர். கோவை மாநகரில் பதற்றம் ஏதுமில்லை அமைதியாக உள்ளது. கூடிய விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, ஒப்பணக்கார வீதியில் நடந்த சம்பவம் தொடர்பான வழக்குகளில் முன்னேற்றம் உள்ளது. இந்த இரண்டு வழக்கின் குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.
அதேபோல மீதி வழக்குகளில் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது தான் இந்த சம்பவங்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதா என்பது தெரியவரும். பாஜக ஆர்ப்பாட்டம் தொடர்பாக மனு அளித்துள்ளனர். அது தொடர்பாக முடிவெடுத்து வருகிறோம். இரவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு - அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்