கோவை: உலக பூமி தினமான இன்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்தியாவில் உள்ள சுமார் 16 கோடி ஹெக்டேர் விளைநிலங்களில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் நிலங்கள் விளைச்சலுக்கு ஏற்புடைய மண் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளில், நமக்குத் தேவையான உணவை வளர்க்க முடியாமல் போகலாம்.
எந்தவொரு தொழில்நுட்பமும் இல்லாமல், பாரம்பரிய அறிவுடன், நம் விவசாயிகள் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவளித்து வருகின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய சாதனை. ஆனால், தண்ணீர் பற்றாகுறை மற்றும் மண் வள குறைப்பாட்டின் காரணமாக விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
![Satguru urges people to plant trees on Earth Day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-isha-script-7208104_22042021163503_2204f_1619089503_51.jpg)
விவசாயிகள் தங்களின் அடுத்த தலைமுறையை விவசாயத்தில் ஈடுபடுத்தவில்லை. இதன் பொருள் இன்னும் 25 ஆண்டுகளில், நாம் நிச்சயமாக ஒரு பெரிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்பதை காட்டுகிறது. தண்ணீரும் உணவும் இல்லாதபோது நிகழும் உள்நாட்டு நெருக்கடியின் நிலை நாட்டை பல்வேறு வழிகளில் துன்பப்படுத்தும். அடுத்த எட்டு முதல் 10 ஆண்டுகளில், தீர்க்கமாய் ஏதோவொன்றை செய்யாவிட்டால், இதுபோன்ற பூதாகரமான சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடும்.
வெப்பமண்டல தேசத்தில் நம்மிடம் உள்ள ஒரே நீர் ஆதாரம் பருவமழை. 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை பருவமழை பூமியில் பொழிகிறது. 60 நாட்களில் இறங்கும் இந்த நீரை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு உணவளிக்க 365 நாட்கள் மண்ணில் பாதுகாக்க வேண்டும். கணிசமான தாவரங்கள் மரங்கள் இல்லாமல் இதை நாம் செய்ய வழி இல்லை.
![Satguru urges people to plant trees on Earth Day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-02-isha-script-7208104_22042021163503_2204f_1619089503_251.jpg)
வளமான மண் தான் நம் தேசத்தின் உண்மையான சொத்து. வளமான மண் இல்லாமல், தண்ணீர் என்ற கேள்விக்கு இடமே இல்லை. ஆகவே, மண் வளத்தை மேம்படுத்த வேளாண் காடு வளர்ப்பு அல்லது மரம்சார்ந்த விவசாய முறை ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். இதன் காரணமாக நாங்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாயத்தை பரிந்துரைத்து வருகிறோம். விவசாயிகள் தங்களுடைய பிற பயிர்களுடன் சேர்த்து அல்லது தனியாகவோ மரங்களை வளர்க்க ஆலோசனை அளித்து வருகிறோம்.
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் படிப்படியாக மேலும் அதிகரிக்க உள்ளது " என தெரிவித்துள்ளார்.