கோவையில் முக்கியப் பகுதிகளில் சந்தன மரத்தை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திவருகிறது. குறிப்பாக பந்தய சாலை, சாய்பாபா காலனி, கோவைப்புதூர், சிங்காநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்துவரும் கும்பல் வீட்டின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு இயந்திரங்கள் மூலம் சந்தன மரங்களை வெட்டி கடத்திவருகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியில் 15 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் உலாவந்தனர். பின்னர் அருகிலிருந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் புகுந்து அங்கு மது அருந்திவிட்டு சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது, அப்பகுதி இளைஞர்கள் அந்தக் கும்பலை விரட்டியடித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றும் கும்பலால் வெளியே செல்லவே அச்சப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.
பயங்கர ஆயுதங்களுடன் மரத்தை வெட்ட அந்தக் கும்பல் ஒரு வீட்டுக்கு முன்பு பதுங்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த காவலருக்குச் சிறை!