உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மருத்துவர்களுக்கு உதவும் 2 ரோபோக்களை கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் அரவிந்த், முத்து வெங்காளியப்பன் ஆகிய இரு இளம் தொழில்முனைவோர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கணினி தொழில்நுட்பத் தீா்வு, ரோபோ தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள இவர்கள், மருத்துவமனைகள், வீடுகள், வாகனங்களில் இருக்கும் கரோனா வைரஸ்ஸை புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி, ரோபோக்கள் மூலம் அழிக்கும் திட்டத்தைத் தயாரித்துள்ளனா்.
இருவரும் இணைந்து உணவகங்களில் உணவு பரிமாறும் ரோபோக்கள், தனியார் நிறுவனங்களில் காவல் புரியும் ரோபோக்களைத் தயாரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், சிங்கப்பூா் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், அரைஸ் பயோமெட் என்ற உயிரி மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் மற்றொரு நிறுவனத்துடன் இணைந்து புற ஊதா கதிர்களைப் பயன்படுத்தி கரோனா தொற்றை அழிக்கும் ரோபோவையும், நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் வழங்கும் ரோபோவையும் உருவாக்கியுள்ளனர்.
இதுகுறித்து முத்து வெங்காளியப்பன் கூறுகையில், ஒரு ரோபோ, கரோனா வார்டுகளில் மருத்துவா்கள், செவிலியர்களுக்கு உதவியாக செயல்படவும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவா்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றை வழங்க உதவுவதற்கும், மற்றொரு ரோபோ கரோனா தொற்று இருக்கும் மருத்துவமனைகள், வீடுகள், அலுவலகங்கள், பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்டவற்றில் அந்த தொற்றை அழிப்பதற்கும் பயன்படுத்த முடியும்.
புற ஊதா கதிர்களை பயன்படுத்தி வைரஸ்களை அழிப்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான் எனவும், பல்வேறு வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள இதனை இந்தியாவிலும் ஆய்வுக்கு உட்படுத்தி பயன்படுத்தலாம்.
இந்த ரோபோவினை ஆய்வகத்தில் பரிசோதனை நடத்தி சான்றிதழ் பெறுவதற்கு அதிகபட்சம் 4 மாதங்கள் வரை ஆகலாம். ஊரடங்கு காரணமாக பரிசோதனை செய்ய முடியாத நிலை இருக்கிறது. அரசு உதவினால் சான்றிதழை உடனடியாக பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியுமென தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த ரோபோக்களை அதிக எண்ணிக்கையில் தயார் செய்தால் 2 முதல் 5 லட்ச ரூபாய்க்குள் செய்து முடிக்க முடியுமெனவும், இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு அரசு உதவினால் மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமெனவும் கூறினார்.
இதையும் படிங்க: உலகை உலுக்கும் கரோனா: நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு!