கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை பகுதி அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக 250 தடுப்பூசிகள் இன்று (ஜூன் 4) வந்ததாகக் கூறப்பட்டது. இதனையடுத்து காலை 8 மணி முதலே தடுப்பூசி டோக்கன் விநியோகிக்கப்பட்டது. ஆனால், நாற்பது தடுப்பூசிகளுக்கு மட்டுமே டோக்கன் விநியோகிக்கப்பட்டிருக்கிறது.
காலை 6 மணியில் இருந்தே பலரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவிந்ததால், அப்போதே தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிவிட்டதாகவும் சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அரிசிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசனிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் ஊராட்சி மன்றத் தலைவர் டோக்கன்களை விநியோகம் செய்ய மறுப்புத் தெரிவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாள்களில் மீண்டும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க : அனைவருக்கும் இலவச தடுப்பூசி - காங்கிரஸ் கோரிக்கை