கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சார்ந்தவர் செந்தில்குமார்(47). இவர் சூலூர் அருகே ரங்கநாதபுரம் பகுதியில் சொந்தமாக அரிசி கடை வைத்துள்ளார். இவர் நாள்தோறும் அருகிலுள்ள பவுண்டரிக்கு வேலைக்குச் செல்வதால் இவரது மனைவி லலிதா (40), மகன் அசோக் குமார் ஆகியோர் அரிசி கடையை பகல் நேரங்களில் கவனித்துவருகின்றனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை (ஆகஸ்ட் 18) இவரது வீட்டிற்கு வந்த அடையாளம் தெரியாத நபர், தனக்கு அரிசி தேவை எனக் கூறி செந்தில் குமாரை அழைத்துக் கொண்டு கடை அமைந்திருக்கும் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர், தனக்கு 5 மூட்டைகள் அரிசி தேவை எனவும் அரிசி மூட்டையை தனது வீட்டுக்கு கொண்டு வந்து தரும்போது அதற்கான தொகையை செல்லுமாறும் கூறியுள்ளார்.
இதை நம்பிய செந்தில்குமார் அரிசி தேவை எனக் கூறிய அடையாளம் தெரியாத நபரின் வண்டியில் இரண்டு மூட்டை அரிசி ஏற்றி விட்டு திரும்பி மற்றொரு மூட்டையை எடுத்துள்ளார். அடுத்த மூன்று மூட்டைகளைத் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு அந்நபரை பின்தொடர தயாராகியுள்ளார். அப்பொழுது இரண்டு மூட்டை ஏற்றிய நிலையில் அடையாளம் தெரியாத நபர் தனது பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார்.
அவரை துரத்திச் சென்ற செந்தில்குமார் அவரை காணமுடியாமல் அப்படியே நின்றுவிட்டார். இதன் பின்னரே அவருக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு அந்நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வியாசர்பாடி அருகே பயங்கரம்: பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி கொலை!