கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேவுள்ள ஆனைமலை வட்டப் பகுதிகளில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்படுவதாக பொள்ளாச்சி உதவி ஆட்சியர் வைத்தியநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை அலுவலர்கள் நிறுத்தினர்.
ஆனால், அந்த லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, வருவாய்த் துறை அலுவலர்கள் தங்களது வாகனத்தில் விரைந்துசென்று அந்த லாரியை மடக்கிப் பிடித்தனர்.
உடனடியாக அதிலிருந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடினார். பின்னர், அந்த லாரியை அலுவலர்கள் சோதனை செய்தனர். சோதனையில், சுமார் மூன்று டன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மேலே வாழைக்குலைகள், உள்ளே 4 டன் ரேஷன் அரிசி: லாரியை மடக்கிப் பிடித்த அலுவலர்கள்