கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றிய, துப்புரவு தொழிலாளர்கள் ஒன்பது பேர் பணி முடிந்த பின்னர் நேற்று (ஜுன் 8) பேட்டரி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் வாகனத்தில் பயணித்த பழனி (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி, நகராட்சி துப்புரவு சங்க பணியாளர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் இன்று (ஜுன் 9) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதில் இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து சமூக நீதி கட்சி தலைவர் பன்னீர் பேசுகையில், “ எவ்வித பாதுகாப்பும் இன்றி துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருவகின்றனர். குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மை பணியாளர்களை அழைத்து சென்றது தவறு. இது மனித உரிமை மீறல் செயல் ஆகும். பழுதடைந்த வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதே இந்த விபத்திற்கு காரணம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க : செல்போன் உபயோகித்ததால் திட்டிய பெற்றோர்: விரக்தியில் கல்லூரி மாணவி தற்கொலை!