கோயம்புத்தூர்: கோவை சிவானந்த காலனி டாடாபாத் பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து சங்கங்களின் வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுக்குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
அதில், ’தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேக்ஸ் கேப் வாடகை வாகனங்களுக்கு பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் 19+1 சீட் பெர்மிட் வழங்க வேண்டும். அண்டை மாநிலங்களுக்கு வாடகை வாகனங்கள் செல்லும்போது மாநிலம் எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் முன்பு நடைமுறையில் இருந்தது போலவே, தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்கிட வழிவகை செய்திட வேண்டும்.
மேலும் பிற்காலத்தில் நடைமுறைக்கு வரவிருக்கும் ஆன்லைனில் தற்காலிக வெளிமாநில அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கு தமிழ்நாடு அரசு எளிமைப்படுத்த வேண்டும். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் சொந்த வாகனங்களில் பயணிகளை அழைத்துச்செல்லும் பொழுது, அந்த வாகனங்களை காவல்துறை துணையுடன் பிடித்துக்கொடுக்கும்போது ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்யவேண்டும்.
மேலும் வாகன உரிமையாளர் மீது மோட்டார் வாகனச்சட்ட விதிப்படி அபராதம் விதிக்க வேண்டும். சாலைகளில் பயணித்துக்கொண்டிருக்கும் வாடகை வாகனங்களை சாலைகளில் தடுத்து நிறுத்தி ஏதாவது ஒருகாரணத்தை சுட்டிக்காட்டி ஓட்டுநர்களுக்கு அபராதம் என்ற பெயரில் ரூ.5000; 10,000 அபராதம் விதிப்பதை திரும்பப்பெற வேண்டும்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து பதிவு கட்டணங்களையும் உயர்த்துவதை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும் டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் குறைத்து, ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசை தமிழ்நாடு அரசு பரிந்துரைக்க வேண்டும்.
மேலும், குடும்ப அட்டை வைத்துள்ள வாடகை வாகனங்களின் உரிமையாளர்கள் அனைவருக்கும் மானிய விலையில் டீசல் வழங்குவதற்கு வழிவகை செய்து தர வேண்டும். RTO அலுவலகத்திற்கு எப்சிக்கு செல்லக்கூடிய வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கருவி சிறந்த முறையில் இருக்கும்பட்சத்தில், மாற்றுக்கருவி பொருத்தவேண்டும் என்று கூறும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தற்போது சுற்றுலா தலங்களில் ஓட்டுநர்களுக்கு அடிப்படைத்தேவையான சுகாதார முறையில் கழிப்பறைகள் அமைத்துத்தர வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு விரைந்து நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மழை பாதிப்பு ...நிவாரணம் வழங்க வலியுறுத்தி சாலைமறியல்