கோவை மாவட்டம் மாங்கரை, தடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி இயங்கும் இந்தச் செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதோடு மட்டுமல்லாமல் யானை உள்ளிட்ட வன உயிரினங்களும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
மேலும் கனிமவளத் துறையின் விதிமுறைகளை மீறி 100 முதல் 200 அடிவரை ஆழமாக மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் ஓடைகளுக்குச் செல்லும் நீர் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே தங்கிவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அதிகளவு புகை வெளியேறுவதால் அப்பகுதி மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு புற்று நோய் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து தொடர்ச்சியாக செங்கல் சூளைகளுக்கு எதிர்ப்பு வந்ததையடுத்து அங்குள்ள செங்கல் சூளை நிறுவனத்தினர் தற்போது தொண்டாமுத்தூர் பகுதிகளில் செம்மண் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தடாகம், வீரபாண்டி, சோமையனூர் பகுதிகளில் தொடர்ந்து மண் எடுக்க எதிர்ப்பு வந்ததால் தற்போது தொண்டாமுத்தூர் பகுதியில் மண் எடுக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
இதனால், தடாகம் பள்ளத்தாக்கை போன்றே விரைவில் தொண்டாமுத்தூர் பகுதியும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்திக்கும் நிலைமை ஏற்படும். எனவே ஆரம்பக்கட்டத்திலேயே செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும், செங்கல் சூளை நிறுவனங்களுக்கு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களும், இதர அரசு அலுவலர்களும் துணை போவதாகவும் வனத் துறையினருக்குத் தெரிந்தே வன எல்லையில் மண் வெட்டி எடுக்கப்படுவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.