துக்ளக் ஆண்டு விழா ஆண்டுதோறும் பொங்கலன்று நடைபெறும். இவ்விழாவில் அனைத்துக் கட்சியினரையும் ‘சோ’ அழைப்பார். ‘சோ’ மறைவுக்குப் பின் துக்ளக் பத்திரிகை ஆசிரியராக குருமூர்த்தி பொறுப்பேற்றார். இந்த ஆண்டு துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில், ராமர் சீதை படங்கள் ஆடையில்லாமல் எடுத்து வரப்பட்டு செருப்பால் அடிக்கப்பட்டது எனப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென திராவிட இயக்கத்தினர் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனுவை அளித்தனர். அதில், துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறாக பேசியதற்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அவதூறாக பேசியதிற்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தர்பார் திரைப்படம் ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: யாரும் எதிர்த்துப் பேச அஞ்சிய பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ! - ரஜினி புகழாரம்