கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் தமிழிசைச் சங்கம் சார்பில் "மறக்கக்கூடாது மனிதர்கள்" என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழருவி மணியன், ‘நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற ஊடகங்கள் கேள்வி கேட்பது எதற்கு என புரியவில்லை. அதற்காக பட்டிமன்றமும் நடத்த வேண்டாம்.
இன்று தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் வாக்குச்சாவடிகளில் பிரதிநிதிகளை வைத்திருப்பது அதிமுகவும் திமுகவும்தான். வேறு எந்தக் கட்சிக்கும் வாக்குச்சாவடிகளில் 10 பேர் கூட பிரதிநிதிகளாக இல்லை. ஆனால், ஓசையில்லாமல் அனைத்து கட்டுமானத்தையும் ரஜினிகாந்த் செய்து முடித்து வைத்துள்ளார். அவரது கட்சியின் பெயர், கொள்கை, மாநாடு எப்போது, மக்களை எப்போது சந்திப்பது உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே திட்டமிட்டு வைத்துள்ளார். வருகிற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் ஆட்சியைப் பிடிப்பார்’ என்றார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.க்கு சீர்மிகு அந்தஸ்து: மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்திய மத்திய அரசின் கடிதம்!