கோயம்புத்தூர்: இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில், நண்டில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் தொழில் செய்து வருபவர், விக்ரம் சுதாகர். இவரது நண்பர் திருநாவுக்கரசு என்பவர் பஞ்சாபில் வசித்து வருகிறார். திருநாசுக்கரசை பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் எனும் இரண்டு பேர் சந்தித்து இயற்கை உரம் வாங்கி, பஞ்சாபில் விற்பனை செய்வதாக கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து திருநாவுக்கரசு இயற்கை உரம் தயாரிக்கும், தனது நண்பர் விக்ரம் சுதாகரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் பஞ்சாப் மாநிலத்தில், இயற்கை உரத்தை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரூபாய் 82 லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள உர மூட்டைகளை விக்ரம் சுதாகர், பஞ்சாப் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
உர மூட்டைகளைப் பெற்றுக்கொண்ட அவர்கள், உரத்திற்கான பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் பணத்தை கொடுக்காததால், கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் விக்ரம் சுதாகர் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் காவல்துறையினர் பஞ்சாப் மாநிலத்திற்குச் சென்றனர்.
அங்கு பங்கஜ் மித்தல் பிடிபட்டார், மற்றொரு நபர் தப்பி ஓடியுள்ளார். பின்னர் கைது செய்த நபரை கோவை அழைத்து வந்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பஞ்சாப்பில் உள்ள ஒரு குடோனில் உர மூட்டைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து அதனை, காவல்துறையினர் முடக்கி உள்ளனர். மேலும் தலைமுறைவான கரம்வீர் செர்கிலை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.46 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்!