கோவை: கோவை மாவட்டம், வால்பாறையில் 54 அரசு மற்றும் தனியார் எஸ்டேட்டுகள் உள்ளன. இதில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்டேட்டில் உள்ள மருத்துவமனையில் அவசர கால சிகிச்சைப் பெற்று மேல் சிகிச்சைக்கு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இங்கு வரும் பொதுமக்களுக்கு கடந்த ஒரு மாதமாக அங்கிருக்கும் தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சையளிக்காமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஸ்கேன் எடுக்கச் சென்ற கர்ப்பிணி: முன்னதாக, இந்த மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாததால் அவசர காலத்தில் ரத்தம் செலுத்த முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும், 108 ஆம்புலன்ஸ் இருந்தும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ நேரங்களில் பலனில்லாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, வால்பாறையில் ஆட்டோ ஓட்டுநராக உள்ள பிரவீன் என்பவர், கர்ப்பிணியான தனது மனைவி ஸ்ரீஜியை வால்பாறை மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டு மீண்டும் வால்பாறை மருத்துவமனைக்குச் சென்ற பொழுது தலைமை மருத்துவர் ஸ்ரீஜி வயிற்றில் வளரும் குழந்தை தொப்புள் கொடி வளர்ச்சி இல்லாததால் ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக பொள்ளாச்சி செல்ல வேண்டும் எனத் தெரிவித்ததின் பேரில் பொள்ளாச்சி வந்து தனது மனைவிக்கு முழு உடல் பரிசோதனை செய்த பிறகு எவ்விதப் பிரச்னையும் தற்போது இல்லை. ஆனால், வால்பாறைக்கு கர்ப்பிணி பெண்கள் சென்றால் சுகப்பிரசவம் நடக்க இருக்கும் நிலைமையில் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் எனக் கூறி கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டாயமாக ஆப்ரேஷன் செய்து பிரசவமா?: பின்னர் மீண்டும் வால்பாறை மருத்துவமனைக்குச் சென்றபோது அந்த ஸ்கேனின் முடிவில், ஸ்ரீஜி வயிற்றில் வளரும் குழந்தை தொப்புள் கொடி வளர்ச்சி இல்லாததால் ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது. இது தவிர, இங்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கட்டாயமாக ஆப்ரேஷன் செய்து பிரசவம் பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
மன உளைச்சலில் தவிக்க வைத்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை தேவை: இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண்ணின் கணவர், 'ஆனந்தி என்ற மருத்துவர், கர்ப்பிணியான தனது மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் தொப்புள் கொடி வளர்ச்சியில் பிரச்னை உள்ளதாக கூறி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக கூறினார். ஆனால், இங்கு வந்த பரிசோதனை செய்ததில் அவ்வாறு எவ்விதமான பாதிப்பும் இல்லையென மருத்துவர்கள் கூறியதாகவும், நலமாக இருந்த தனது மனைவிக்கு பிரச்னை என்று கூறியதால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அலைக்கழித்ததற்கான காரணம் என்ன?: பணியிடமாற்றம் செய்க: இவ்வாறு இல்லாததை இருப்பதாக கூறியதால், தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், இதற்கு காரணமான மருத்துவர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடவும் தயாராக உள்ளதாகவும், வெளியூரில் கூலித்தொழிலாளியாக இருக்கும் நான் இதனால் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் வருந்தினார். மேலும், சம்பந்தப்பட்ட வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், செவிலியர்களையும் பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தங்களை அலைக்கழித்ததற்கான காரணத்தையும் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
செல்போன் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை: நேற்று இச்சம்பவம் குறித்து அறிந்த வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனை சென்று கர்ப்பிணி பெண்களுக்கு ஆறுதல் கூறி மருத்துவமனை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு முறையாக சிகிச்சை அளிக்காது கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் செல்போன் லைட் மூலம் மருத்துவர்கள் நோயாளிக்கு சிகிச்சை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வால்பாறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மீரா,பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜா கர்ப்பிணிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது -முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி